சனி, 14 மே, 2022

பூவும் பேதையும்



புது காலையில் 

பூத்த  மலரை 

மண்டி யிட்டு 

முகர்ந்து பேசிக் 

கொண்டிருந்த பெண் 

பிள்ளையை பின்னுக்குத் 

தள்ளி பிய்த்துத் 

தின்று பேசாமற் 

போன பெட்டை 

ஆட்டிடம் பேச்சு 

வார்த்தைக்கு போக 

பேசும் பொம்மை 

யொன்றை துணைக்கு 

கை  பிடித்து 

அழைத்துக் கொண்டு 

"இனிமே பூ 

சாப்ட்ட சாமி 

கண்ண குத்தும்னு"

அம்மா சொல்வதைப்போல

கண்டிப்பா சொல்லவும் 

அதை புரிந்தார் 

போல் மண்டையாட்டிய 

யாட்டிடம் சம்மதம் 

வாங்கின மகிழ்ச்சியில் 

பூச்செடிக்கு ஆறுதல் 

சொல்ல வந்த 

வேளையில் அப்பா 

அதே செடியில் 

மீதிப் பூக்களை 

பரித்துகொண்டிருந்ததைக்  

கண்டு புரியா 

மொழியில் பொரிந்து 

தள்ளி விட்டு 

வீட்டுக்குள் சென்று 

இறந்து போன 

பூக்களுக்காக 

அழுது கொண்டிருந்தபோது 

அம்மாவிடம் 

"சாமி அப்பா 

கண்ண குத்தாது-ல"

என்றவளை 

புரியாமல் அணைத்துக்கொண்டாள்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக