திங்கள், 8 செப்டம்பர், 2025

விதைத்து யாரோ

 உழவு செய்த பின் 

நல்ல மழை பெய்து 

விதைக்க காத்திருக்கும் 

நன்னிலம் போலிருந்த 

மனது


தூங்கி விழிக்கையில் 

விஸ்தாரமான மரமொன்று 

வளர்ந்துவிட   


அதன் கிளைகளை 

அனுமானிக்கிறேன் 


பாலை 

சுவைக்கிறேன் 


இலையை 

முகர்கிறேன் 


விழுதுகளை 

வியக்கிறேன் 


பழங்களை 

பறிக்கிறேன் 


வீசும் காற்றில் 

அசையும் மரத்தில் 

லயிக்கிறேன்


இம்மரம் 

பிடித்திருக்கிறதோவென 

எண்ணுகையில் 


எவர் விதைத்த 

வித்து 

இது 

எமக்கு தேவையா 

இது 


என்னும் கேள்வி 

மேலெழும்ப 


கிளைகளை 

வெட்டி வீசுகிறேன் 

வளர்கிறது விநாடியில்  


வேறு இலைகளை 

இணைக்க

கிழித்து வளர்கிறது


அடியோடு

இடமாற்ற  முயற்சிக்க  

இயைந்து கொடுக்கவில்லை 

 

வேரோடு பிடுங்க 

பிரயத்தப்பட்டு 

பயனில்லை 


கவளீகரிக்க 

முயன்று 

களைத்தப் போக 


காரணம் 

யவராயிருக்கும் 

என 

யூகித்து 


விதைத்தவனை 

எதிர்த்து 

வளர மறுக்கும் 

வழிவகை 


கூறி முடித்து 

களைந்த பின் 


இருந்தாலும் 

வளர்த்திருக்கலாம் 

என்று சொல்லி

சென்றான் 


திரும்பி நின்று 

புண் முறுவலோடு 

செல்லுகையில் 


வேறொரு 

சிவப்பு ஆலமரம் 

வியாபிக்கிறது 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக