சனி, 30 டிசம்பர், 2023

சந்தேகப் புதர்

தூது வந்தவனை 

துரத்திச் சென்று 

துயரந்தனை 

வாங்கி வந்தேன் 


தலைப்பில்லா 

புத்தகத்திற்கு 

தலையங்கம் 

நானா ?


சந்தேகப் புதர் 

சாளரங்களை 

மறைத்து வளர்ந்து 

கொண்டிருந்தது 


காரணங்களைக் கொண்டு 

களைய நினைக்கிறேன்

அவை 

குலைந்த வண்ணமே 

உள்ளது 


புதர் வளர்ந்து 

கொண்டேயிருக்கிறது


தெரியாமல் 

தொடர்ந்தேன் 

தேவதையாகவே

தெரிந்தது 


புதர் வளர்ந்து 

கொண்டேயிருக்கிறது


தெரிந்தே 

தேர்வுகள் வைத்தேன் 

தோல்விகள் 

எனக்கேக் கிட்டியது 


புதர் வளர்ந்து 

கொண்டேயிருக்கிறது


பூட்டு போட்டு 

வைத்ததில்  

புழுங்கியது 

எனக்கு 


புதர் வளர்ந்து 

கொண்டேயிருக்கிறது


பொறுக்காமற் 

கேட்டு விட்டேன் 

ஓர் நாள் 


புத்திரர்கள் எனது 

உதிரந்தானா ?


புதர் வளர்ந்து 

கொண்டேயிருக்கிறது


சூளுரைக்க ஒன்றுமில்லை 

அங்கமெல்லாம் ஆக்கிரமித்த 

சந்தேகப் புதர் 

அகற்ற வழியில்லை 

அழிந்து போ !


இட்ட சாபம் 

எட்டியது 

புதரழிந்து 

பூ பிறந்தது 

சவத்தின் மேல் !

நேர அடகு

சொந்த நேரத்தை  

அடகு வைத்து

சொற்ப சம்பளத்துக்கு 

வேலைக்கு போவதற்கு 


அனைவருக்கும் 

ஆயிரம் காரணங்கள் 

இருக்கும் 


அவையாவும்

தீப்பிடித்த காட்டிலிருந்து 

தப்பி யோடும்போது 

முள் குத்தியதற்க்கு

நின்று 

முறையிடுவது போலாகும்  

வெற்றிப் பயணம்

இலக்கு 

வேறாய் இருக்கலாம் 


பாதை 

நூறாய் இருக்கலாம் 


பயணத்தை 

தொடங்குவதே 

இங்கு  பாதி 

வெற்றியாகும் ! 

வார்த்தைத் தூண்டில்

 மனமொரு

வார்த்தை நிரம்பிய 

வற்றா 

குளம் போன்றது


தீவிர பிரச்னையின் 

தீர்வு  காணும் 

பொருட்டு 


தூர நின்று 

நிதானத்தின்  தூண்டிற்கொண்டு 

வார்த்தைகளை தேர்ந்தெடுத்து 

வரிகளுக்கு உருக்கொடுத்து 

வர்ணனை செய்வோரே

இரை பிடிக்கலாம் 


ஆத்திர அலையில் 

அவசரத்தின் அருகினின்று

வந்ததை எல்லாம் 

வாரி எடுத்துக் 

கொட்டுவது 

அவரையே கடிக்கலாம் 


பறவை - கிளை - இலை

கிளைகளைப் பிடித்துள்ள 

பறவைகள் அனைத்தும் 

காற்றடித்தால் மேல்நோக்கி 

பறந்து விடுகின்றன 


கிளைகள் பிடித்துள்ள 

இலைகளால் எல்லாம் 

காற்றடித்தால் மேலே 

பறக்குமா என்ன?

புத்தகம்

எவ்வொரு புத்தகமும் 

வாசிக்குமுன் 

எடையற்ற 

வெள்ளைத்தாளில் கிறுக்கப்பட்ட 

கருப்புக் கோடுகளாகவே

வெளிப்படும்

  

அதுபோற் 

எந்தவொரு பொருளும் 

கரையவோ அல்ல 

உருகவோ தொடங்கினால் 

எடை குறையும் 

என்பதும் விதி 


ஆனால் 

ஒரு சிறந்த 

புத்தகம்  மட்டுமே 

பக்கங்களை 

திருப்ப திருப்ப

எடையற்ற 

அவையனைத்தும்

வலிய விதியறுத்து 

 

ஓர் உலகத்தோடு ஒத்த 

கணத்தைக் ஒளித்துக் 

கொண்டுள்ளது 

புலப்படும் 

வாசித்துணர்ந்தோர்க்கு 

மட்டும் !

புதன், 27 டிசம்பர், 2023

மனையழகாள்

நான் அழகில்லையா ?

என்று கேட்கும் 

மனைவியிடம் 

எப்படி சொல்வேன்.. 


மழையின் 

உருவம் 

இன்னதென 

எவரேனும் 

அறிந்ததுண்டா?


மழை என்றாலே 

பிடிக்கும் தானே !


அதுபோற் 

மணவாட்டி !!

என்றாலே 

மனங்குளிரும்

மரக் கதறல்

 ஒவ்வொருமுறை 

வாகனம் கடந்து 

செல்லும்போதும்  


அவ்வேகத்தில் 

அசைந்தாடும் 

சாலையோரம் 

தனித்து 

நின்றிருக்கும் 

மரங்கள் எல்லாம் 


எங்களை 

விட்டு விடுங்கள் 

நாங்கள் 

காட்டுக்கே 

சென்று விடுகிறோம் 


என்று சொல்லி 

கதறுவதை 

போலுள்ளது..

திங்கள், 25 டிசம்பர், 2023

ஒரு தலை காதல்

பெண்ணிடம் 

பேசும் முன் 

நா உளற 

பேசிய பின் 

கை உதற 

ஏன் பேசினேன் 

என்று 

குழம்பும் எனக்கு 


இப்படியாக 

இருந்தாலென்ன வென்று 

செதுக்கிய சிலையொன்றை 

சிலுவையில் அறையாமலே 

சுமந்து கொண்டிருந்தேன் 


அச்சிலையோடு ஒத்தவள் 

சிலுவை யணிந்து 

சிரித்துக்  கொண்டிருக்கையில் 

பிடித்தேன் 

மனப் படமாய்


சிக்கி கொண்ட 

சிந்தனையில் 

சிதறவே இல்லை 

கவனம் வேறெங்கும் 


கனவுகளை 

காட்சிப்படுத்தி 

நினைவுகளில் 

மென்று கொண்டிருந்தேன்


நேற்றின் கானலில் 

நிறந் தவறிப் 

பிறந்த குழந்தை 

இந்த 

ஒரு தலை காதல்

சனி, 30 செப்டம்பர், 2023

மர வீடு

 நூறாண்டுக்கும் பழமையான 

மரங்களை 

உயிரோடு அறுத்தெறிந்து 

சாலை விரிவாக்கம் 

என்னும் பெயரில் 

சாவை நமக்கு 

நாமே 

வரவழைத்துக் கொண்டிருக்கிறோம் 


பல நாளாய் 

வீடென கருதி 

சென்று வரும்

பெயர் தெரியா பறவைக்கு 

இன்று யார் சொல்வது 

வீடு வெட்டி எறியபட்டதென்று 


செல்ல இடமறியாது

சூடு தாளாமல் 

பித்தம் கலங்கி 

கானல் நீரை 

கொத்தி குடித்து

இறக்கிறது 


அதுபோற் 

நிழலுக்கு இடமின்றி 

நா  வறண்டு

நடை தளர்ந்து

மூச்சு விட முடியாமல் 

முயங்கி மறைவோம் 


இயற்கை என்பது 

இயல்பாகவே நமக்கு 

கை கொடுக்கிறது 

எல்லா வகையிலும் 

நாம்தான் 

அதனை ஒவ்வொருமுறையும் 

வெட்டிக் கொண்டே யிருக்கிறோம்


மரமும் அதன் 

பிள்ளைகளான  பறவைகளின் 

சாபமும் 

கட்டாயம் 

மனிதரை கொல்லும்

நவீன கோவில்கள்

 இப்பொழுதெல்லாம் கோயிலுக்கு செல்ல பெரும்பாலும் யோசிப்பதேயில்லை.

யாரேனும் கட்டாயத்தின் பேரில் அழைத்தால் அவர்களோடு செல்வதுண்டு, மற்றபடி சுயமாக கோயிலுக்கு செல்ல வேண்டும் என்ற எண்ணம் சில வருடங்களாக தோன்றுவதேயில்லை. ஏனெனில் கோயில்கள் இப்பொழுதெல்லாம் நன்றாக பெயிண்ட் அடிக்கப்பட்டு தரை முழுவதும் டைல்ஸ் கல்லோ அல்லது வேறு ஏதேனும் பள பளக்கும் கல்லையோ  போட்டு நிரப்பி விடுகின்றனர். அவை எனக்கு கோயிலுக்கு சென்ற நினைப்பாய் தோன்றுவதில்லை எதோ திருமண அல்லது பிறந்தநாள் கொண்டாடப்படும் மாலுக்கு செல்லுவதை போலுள்ளது.


முன்பெல்லாம் அங்கு செல்லும்போது தரைகள் கருங்கற்களால் நிரப்பட்டிருக்கும். அவை சோர்ந்து போய் அமரும் எனக்கு மூல ஸ்தானத்தை சுற்றி வரும் போது காலுக்கு பிடிமானமாகவும் சுற்றி அமர்ந்து பின்பு மனதிற்கு ஒரு பிடிமானமும் வரும், இப்பொழுதெல்லாம் எங்கு தவறி வழுக்கி வீழ்ந்து விடுவோமா என்ற பயந்தான் மேலோங்கி நிற்கிறது கவனமெல்லாம் கூர்ந்து கவனித்து நடப்பதிலே இருக்கிறது.


சில சமயம் தலைவலியோடு போனால் கூட அமைதியான சூழல், காதோரம் மெதுவாய்பாடும் MSV, தீப ஒளியில் தெய்வம் என்னும் நிறைவோடு, வலி அதனை மறந்து வந்தநாட்கள் கூட உண்டு. 


கோயில்களில் நண்பர்களை பிடித்த கதையெல்லாம் கூட கேட்டிருக்கிறேன். பெரிய ஆலமரம் கோவிலின் வளாகத்தில் இருக்க, அதனை சுற்றி யாவரும் அமர ஏதுவாய் கருங்கல் அமைக்கப்பட்டிருக்கும். மெல்லிய காற்று, கிளையொடு இசைந்தாடும் இலைகள், பெயர் தெரியா பறவைகளின் எச்சம் பல வீழ்ந்து கருங்கல் வெள்ளையாகிருக்கும் இடத்தில்  இலைகளை கைகளால் நீக்கி புறந்தள்ளிவிட்டு, அமர்ந்து பல யோசனைகளுக்கு அப்பால் கண்களை மூடி, மணியோசை கேட்டு விழிக்கையில் பாரம் பாதியாக குறைந்ததை எண்ணி எட்டு வைத்து நடந்தவர்கள் பலர்.


அதனை சுற்றி இரும்பு கம்பிகள் கொண்டு வேலியமைத்து ஆலமரத்தினடியில் மீண்டும் பிள்ளையாரை வைத்து இன்னுமொரு உண்டியல் வைத்து நிரப்பட்ட பின்னர் எங்கு அமருவது? எதோ உணவகத்துக்கு சென்றது போல்  சாப்பிட்டோமா, காசு குடுத்தோமா, வந்தோமா என்பது போலுள்ளது.


கண்ணை பறிக்கும் அலங்கார விளக்குகள், காதை கிழிக்கும் இசை, கூட்ட நெரிசலிலும் குலுங்காமல் youtube-க்கு நேரலை அனுப்பும் தம்பி, கயிறு விற்க, ஜோசியம் பார்க்க, சீட்டு குலுக்கி போட்டு சிவப்பு சிலிர்க்கும் வெள்ளை வெளுக்கும் என்று அதற்கேற்றாற்போல் கதை சொல்ல இன்னும் ஏரளமாம் ஏராளம், இதிலெங்கு அமைதியை தேடுவது. அனேகமாக அதுவே எங்கோ கூட்ட நெரிசலில் விழி பிதுங்கி கிடக்கும் என்று தான் நினைக்கிறேன்.


கோயில்கள் மன நிறைவை கொடுத்தது போதுமென்றெண்ணி பண வரவை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது போலும்.


கோவிலுக்கு சென்று வந்த நினைவு அக்கோயிலுடன் உண்டான பிணைப்பு எல்லாம் நீர்த்து போவது போலுள்ளது, மனதில் பெரும்பாலும் அது சார்ந்த எதுவும் படியாமலே கரைந்து போகின்றது. கோவிலுக்கு சென்று வந்தோம் என்ற மன நிறைவே கூட பாதியாகிவிட்டது.


எல்லா கோயில்களும் அப்படி இல்லை, ஆனால் இப்படியும் கோயில்கள் இருக்கத்தான் செய்கின்றது.


வியாழன், 25 மே, 2023

வெட்கமில்லையா

மேகங்கள் முத்தமிடும் 

அந்தரங்கத்தை 

வெளிச்சமிட்டு காட்டும் 

மின்னலே 

உமக்கு 

வெட்கமாகவேமில்லையா ?


ஞாயிறு, 21 மே, 2023

மௌனக் கிணறு

 எப்பொழுதும் 

நீ பேசும் 

அன்பான 

மௌனங்களை எல்லாம் 

ஒரு கிணற்றில் கொட்டி 

நிரப்பி விட்டாலென்ன? 


ஏனெனில் 

எப்பொழுதாவது 

நீ பேசா 

சுடு சொற்களை

 

அம்மௌனக்  கிணற்றிலிருந்து 

வாளி இரைத்து 

தனித்துக் கொள்வேன் 

அன்பெனும் குற்றம்

அன்பென்பது அனுதினமும் 

வீசும் கடலலை போல 

அதை 

பெரிதாக பொருட்படுத்துவதேயில்லை 


ஆனால் 

எப்பொழுது கவனத்திற்கும் 

எதிர்பார்ப்புகளுக்கும் 

உள்ளாக்கப்படுகிறதோ 


அப்பொழுது 

நடு 

இரவினில் வந்து 

கடல் அலைகள் 

சுடவில்லை எனவும் 


நன் 

பகலினில் வந்து 

குளிரவில்லை எனவும் 

சொல்வது போலாகும்

ஞாயிறு, 29 ஜனவரி, 2023

மரத்தின் சாபம்


தென்றலுக்கேற்ப 

இலையும் கிளையும் 

இசைந்து 

அசையும் நிழலில்

தாய் போலத் 

தாலாட்டி தூங்கவைத்த 

மரத்தினை கொன்று 

வேரோடு சாய்த்து 


மலையளவு வீடெழுப்பி

அசையா நிழலில் 

நிம்மதியாய் உறங்க வெண்ணி

தாய் கொண்ட 

கோபத்தின்  அழல் 

தாங்க 

முடியாமற் தவித்து  

வெக்கிப்  புழுக்கந் தாங்காது 

புறத்தை யோடி


புரியாமற் 

பார்க்கையில் 


மரத்தின் உயிர்ப்பான 

நிழலை விட 

சுவரின் உயிரற்ற 

நிழல் எவ்வகைளும் 

ஏற்புடையதல்ல 

என்றுணரும் தருணம் 


மரத்தின் பிடியில் 

வீடே சூன்யமாய் 

மாறியிருக்கும்