சனி, 9 ஜூலை, 2022

தந்தையின் தவிப்பு



கடைசி முத்தம் 

கணவனின் கண் 

அனுமதி கொண்டு 

பெறுவதில் இடம் 

பெயர்கிறதவள் வாழ்க்கை 


கேட்டதும் கொடுத்ததும் 

மனகனந்தாங்காது

நினைவு தப்பி 

நிற்கையில் கடந்து 

போய்க்கொண்டிருந்தவளின் 

பிம்பம் தேய்கையில் 

தேங்கி நின்றதென் வாழ்க்கை 


என் பிள்ளை 

என்றடையாளம் துறந்து

அவர் மனைவி 

என்றாகி போகையில் 

புலனது ஏதோ 

இழந்த உணர்வு 


அவள் பெயர்

நீக்க மனமன்றி 

புதுப்பிக்காமல் 

பழைய குடும்பமாக

என் பிள்ளையென்றே

இருக்கிறது  

குடும்ப அட்டை


எம்பெயரின் முதலெழுத்து 

அவள் பெயரின் முதலானதன் 

இருபத்தேழு வருட 

கர்வம் இன்றோடு 

ஒழிந்தது 


கல கலவென 

சிரிப்பால் நிறைந்த 

இவ்வீடு 

அவலகன்றதும் 

ராணியற்ற ராஜ்ஜியமாய்

கலையிழந்து 

வெறுங்கல் 

வீடாகியது 


கட்டளையிட ஆளற்ற 

சேவகனாய் 

தன்னிச்சையாய் செயல்பட 

முடியாது  தடுமாறி 

நிற்கின்றேன் 

நான் 


எப்போது 

வெளிச்சென்றாலும் 

எனக்கு போன் செய்துவிட்டு 

அம்மா எங்கே 

என்று கேட்பவள் 

இப்பொழுதெல்லாம் அவளுக்கு 

போன் செய்துவிட்டு 

அப்பா இல்லையா ?

என்பதன் எதார்த்தம் 

என்னால் ஏனோ 

ஏற்கமுடியவில்லை 


எது எங்கென்றறியா 

அவர் வீடு 

அவளதாகிய பின் 

அவளாசைப் படி 

அமையப்பெற்ற  

இவ்வீடு 

மறுவீடாகையில் 

சற்றே மருகுது 

நெஞ்சம்


விசேஷத்துக்கு மட்டும் 

வீடுவரும் சொந்தக்காரி 

போலான சொந்த 

மகளையெண்ணி 

அவளுக்கு பிடிக்குமென்று 

ஆட்டுக்கறி குழம்பு 

அம்மியில் அரைத்த 

மசாலா சேர்த்து 

செய்ததை அவளுக்கு 

பரிமாற வந்தால் 

'அவருக்கு முதல 

வைங்கப்பா' என்று 

சொல்வதவள் தவறில்லை 

அதை ஏற்கும் 

பக்குவம் தான் 

எனக்கு இன்னும் வரவில்லை


குழம்பு பட்டுவிட்டதென 

கண்ணாடி போட்ட 

கண்ணை தேய்த்துக் 

கொண்டே கண்ணீரோடு

அவள் காணும்முன்  

வெளிச்செல்கிறேன் 


எமக்கு பிறந்த 

எம்பிள்ளையாயினும் 

திருமணத்திற்கு பின் 

தத்துக் கொடுத்த 

தந்தை போல் 

உரிமையற்று ஓரமாய் 

நின்று வேடிக்கை 

மட்டுமே பார்க்கிறேன் 


அவன் நல்லவனாயிராவிட்டாலும் 

கெட்டவனாய் இருந்திரக்கூடா 

தென்பதே என் இறுதிநாள் 

வரையிறுக்கும் ஒரே

வேண்டுதல்


பிரிவென்பதோர் நாள் வரும் 

என்றுணர்ந்தே பிரியமும் 

பாசமும் வைக்கும் இத் 

தந்தையின் நிலை 

இப்பொழுது 

தற்கொலைக்கு நிகராகவல்லவா 

நிற்கிறது 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக