பதில்களற்ற கேள்விகள்
இரவின் இருட்டில்
திரியும் சர்ப்பம்
போல
இல்லையென்றென்னி இடது
காலூன்றினால் இருக்கென்ற
உண்மை கொத்தும்
இருக்கென்றென்னி வலது
வைத்தால் இல்லையென்ற
அச்சம் கொத்தும்
விடையறிந்து தொடுக்கப்படும்
வினாக்களுக்கு
எதிர் வரும் பதில்
எதிர் பார்த்ததில்லையெனில்
அடுத்து வரும்
கேள்விச் சிறுத்தை
மனவேலி தாண்டி
பதிலாடை பற்றிக்
குதறும்
பரிசீலிக்கப்படாத பதில்களுக்கு
மாற்றாய் மவுனம்
மத்தியில் வைக்கப்படும்போது
மதங்கொண்ட அத்தினி
பிளிறுவதை போல்
அவர்தம் பதிலை
நிரப்பி அதற்குமோர்
கேள்வியை சிதறி
செல்வர்
கேள்விகளால் வேள்வி
யமைத்துக்கொண்டு
சரியென்ற பதிலையும்
ஒப்பாது
சுட்டு தீயிட்டு
கருக்கி
களத்திற்கு ஒவ்வா
ஓர் வினா
வீசிச்செல்வர்
சென்ற
விடையானது சிலந்தி
வலையில் சிக்கிய
சிறு பூச்சி போல்
வினாவினுள் சிக்கி
வெளியேற வழி
தெரியா விக்கி
நிற்கிறது
இட பொருள் ஏவலற்ற
கேள்வி விதைப்போர்
வீரனாகிறார்
அதுகண்டு அமைதி
காப்போர்
கோழையாகிறார்
விடை யென்பதுகூட
வினா வாகவே
விரிந்து வருகிறது
அவர்தம் வாய்வழி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக