கருத்த நாயின்
பெருத்த உருவத்தின்
பின்னங்காலிலிருந்த
சிதைந்த புண்ணின்
சீழிலிருந்து
சீறும் நாற்றம்
எவரேனும் செய்வர்
உதவி என
ஏங்கிய மனதுடனும்
மங்கிய பார்வையுடனும்
முனகிக்கொண்டே
வாலை ஆட்டிக்கொண்டு
வாசல் வாசலாக
தன் வம்சத்துடன்
வந்து நின்றது
வந்தோரெல்லாம்
செந்தேளிதழ் கொண்டு
வாயிற் வசை பாடிக்
கொட்டிச்
சென்றாரேத் தவிர
சிறிதேனும் வலியதனை
உணரவில்லை
அறியா பிள்ளையெனும்
சிறிய சாத்தான்கள்
அப்புண்ணில்
தண்ணீர் கொட்டியும்
மண்ணள்ளி வீசியும்
விளையாடிய போது
குரைக்க கூட
வலுவற்று
குனிந்து சென்றது
குழந்தைகள் திரியும்
இத்தெருவில்
வேகமாய் செல்லும்
வண்டிக்காரர்களை துரத்தும்
அப்படி துரத்தியோடிய
யொருவன் திரும்பி
வந்து செங்கற்க்
கொண்டு பின்னங்காலில்
இட்டதன் இடரிது
தோய்ந்து தோய்ந்து
தெருவின் முதல் வந்து
நிற்கக்கூட திராணியற்று
நிலை தடுமாறி
நீர்தொட்டி யருகை
வீழ்ந்த பின்
பின்னங்காலில் ஈக்கள்
மொய்க்க
நாவால் நக்கி விரட்ட
முயல முற்பட்டு
முடியாமற் போக
சுருண்டு படுத்த
போது சுயநினைவு
சூன்யமாகிக் கொண்டிருந்தது
வலியது பொறுக்காமல்
ஊளையிட்டதன்
ஒளி ஊருக்குக்கேடென
பிள்ளையார் கோவில்
பூசாரி கூற
ஊரின் எல்லை
கொண்டு வீசப்பட்டதேயன்றி
உதவ வில்லை
யொருவரும்
இரு நாள் கழித்து
இறந்து கிடந்த நாயின்
மடியை கவ்வி
இழுத்துக் கொண்டிருந்தன
இரு குட்டிகள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக