சனி, 30 டிசம்பர், 2023

சந்தேகப் புதர்

தூது வந்தவனை 

துரத்திச் சென்று 

துயரந்தனை 

வாங்கி வந்தேன் 


தலைப்பில்லா 

புத்தகத்திற்கு 

தலையங்கம் 

நானா ?


சந்தேகப் புதர் 

சாளரங்களை 

மறைத்து வளர்ந்து 

கொண்டிருந்தது 


காரணங்களைக் கொண்டு 

களைய நினைக்கிறேன்

அவை 

குலைந்த வண்ணமே 

உள்ளது 


புதர் வளர்ந்து 

கொண்டேயிருக்கிறது


தெரியாமல் 

தொடர்ந்தேன் 

தேவதையாகவே

தெரிந்தது 


புதர் வளர்ந்து 

கொண்டேயிருக்கிறது


தெரிந்தே 

தேர்வுகள் வைத்தேன் 

தோல்விகள் 

எனக்கேக் கிட்டியது 


புதர் வளர்ந்து 

கொண்டேயிருக்கிறது


பூட்டு போட்டு 

வைத்ததில்  

புழுங்கியது 

எனக்கு 


புதர் வளர்ந்து 

கொண்டேயிருக்கிறது


பொறுக்காமற் 

கேட்டு விட்டேன் 

ஓர் நாள் 


புத்திரர்கள் எனது 

உதிரந்தானா ?


புதர் வளர்ந்து 

கொண்டேயிருக்கிறது


சூளுரைக்க ஒன்றுமில்லை 

அங்கமெல்லாம் ஆக்கிரமித்த 

சந்தேகப் புதர் 

அகற்ற வழியில்லை 

அழிந்து போ !


இட்ட சாபம் 

எட்டியது 

புதரழிந்து 

பூ பிறந்தது 

சவத்தின் மேல் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக