சனி, 31 டிசம்பர், 2022

அடுத்த எண்



நெல்லுக்கு நாற்று விட்டு 

நடவு செய்து 

அறுவடைக்கிடைப்பட்ட 

காலத்தில் 

வருடம் மாறிவிடுகிறது 


ஆனால் 

அதற்கு தேவையானது 

என்னவோ வளர்வதற்கான 

நாட்களும், நன்னீரோடு 

நம்பிக்கையான உழைப்பும்  

போதுமானது 

வருடத்தின் எண் அல்ல 


அதுபோல் 

நாம் செய்யும் 

நற்செயல்கள்தான் 

வருடங்கடந்தும் 

பேசும் 


எந்த நாளில் 

தொடங்கினோம் 

என்பதையல்ல 


ஆதலால் 

நற்செயலை தொடங்க 

எனக்காக 

காத்திருக்க வேண்டாம் 


-இப்படிக்கு 

    புத்தாண்டின் மற்றொரு எண்


வியாழன், 29 டிசம்பர், 2022

ஒரு பாடல் = ஓராயிரம் நினைவுகள்

 


காலையில் 

காதினுள் நுழைந்த 

ஒரு பாடல் 


கூண்டுக்கிளி 

சிறகடித்து பறக்க

எம்பி எம்பித் 

துடிப்பதை போல் 

மனதினில் அலைப் 

பட்டுக்கொண்டேயிருந்தது 


பின் சிறிது நேரத்தில் 

தேநீர் உதவியோடு 

தனிமை கொஞ்சம் 

கிடைக்க அப்பாடல் 

மீண்டும் துடிக்க 


அதனூடே 

மிதந்து கொண்டு 

பயணிக்கையில் 

தூர நீர்ப்பரப்பு 

சென்று 


ராகங்களை 

தூண்டிலாகயிட்டு 

நினைவுகளில் துவள 

தூரத்தில் பாடல் மட்டும் 

ஒலித்திக்கொண்டிருந்தது 


அவ்விசையோடு 

கோர்க்கப்பட்ட நினைவுகளில் 

இப்பொழுதும் 

சில கீறல்களிருக்க 


முள்ளின் முனையை 

தொட்டுணர்ந்ததுபோல் 

மேலை பட்டதும் 

மீண்டும் 

ஆழஞ்சென்றது 


மறு முறை 

வரும்போது 

ஆரத்தழுவி விடுவேன் 

யென்ற முனைப்புடன் 


அதர விளிம்பில்

சிறு புன்னகையை 

எடுத்துக் கொண்டு 

கரையை யடைந்ததும் 


நீரின் ஆழத்தில் 

யாரும் கண்டிரா 

திரியும் ஏதோவோர்  

உயிரினத்தின் 

காயங்களுக்கு 

மருந்திட்ட திருப்தி..

செவ்வாய், 27 டிசம்பர், 2022

முட்டாள்தனம்

 



பல்லாயிரம் பேரின் 

உயிரை எடுத்தோ

அல்லது  

ஊன்று கோலுக்கு 

துணையாக்கியோ 

விட்ட போர் வாளை 

இடுப்பில் வைத்துக் கொண்டு 

பூனைக்கு 

சகுனம் பார்த்த கதையாய் 



புறம் பேசி 

பலரின் வாழ்வை 

நிர்கதியாக்கியவர்களை 

நண்பர்களாய்  யெண்ணி 

முகமுன் 

கோபப்படுபவர்களை 

முதல் எதிரியாய்

பாவித்த 

முட்டாள்தனம் 

போலிருக்கிறது 


திங்கள், 26 டிசம்பர், 2022

வாழ்கை பேருந்து

 



மற்றோரின் 

விருப்பு வெறுப்புகளுக்காக 

வாழ்கைப் பேருந்தை 

வேகமாய் செலுத்தினால் 


தொலைவினில் 

ரெயில் வண்டிக்கு 

பின்னே மறையும் 

சூரியனை பார்க்க 

நேரிடலாமல் போகலாம் 


மழை தூறல்கள் 

தோலில் தரும் 

கிச்சு கிச்சுக்களை 

 உணராமல் போகலாம் 


பல்வேறு நிறுத்தங்களில் 

ஏறியிறங்கும் நபர்களும் 

அவர்களின் நினைவுகளும் 

கிடைக்காமலே 

போகலாம் 


சமயங்களில் ஆற்றனிலிறங்கி 

அசுத்தங்களை களையும் 

வாய்ப்புகள் வாய்க்காமலே 

போகலாம் 


பயணத்தில் 

எதிர்கொள்ளக்கூடிய 

பள்ள மேடுகளால் 

பாதை மாறி 

பயணப்படும்போது தோள் 

தட்டித் தேற்ற 

துணையற்றுப் போகலாம்  



இவ்வாறாக சொல்லக்கூடிய 

அல்லது 

சொல்லில் நிரம்பா

உணர மட்டுமே கூடிய 

எண்ணற்ற விசயங்களை 

இழந்து 



இலக்கை அடைந்தாலும் 

யாருமற்ற 

நிறுத்தத்தில் 

தனியாக 

நிற்க நேரிடும் 


என்பதை 

நினைவிற் கொண்டு 

மெல்ல செலுத்துக

வாழ்க்கை பேருந்தை  



சனி, 24 டிசம்பர், 2022

மலரும் மனிதமும்



 மலரும் ஓர் 

பூவைக் கண்டு 

மற்றொரு பூ 

என்றுமே 

பொறாமை 

கொள்வதேயில்லை 


மாறாக

மலரு மழகிய 

நிகழ்வைக் கண்டு 

மகிழ்ச்சியுறுமை யன்றி 


மலரா தன்னோடு 

ஒப்பிட்டு 

அந்நிகழ்வை 

கலங்கப் படுத்தாது 


தனித்துவமான 

தன்னுடைய 

மணம் விட்டு 

மலருவதற்காக  


தனக்கான நேரம் 

வரும் வரை 

பொறுமை காத்துக் 

கொண்டிருக்கிறது 


இப்படியாகத் தானிருந்திருக்க 

வேண்டும் 

மனிதமும் 

ஆனால்...


வியாழன், 22 டிசம்பர், 2022

ரசனை


 

முற்றும் கற்றவனென 

எவனுமில்லை 


ஏனெனில் 

கற்பதருக்கென்று 

ஏதாவதொன்று 

இருந்து  கொண்டே

தானிருக்கும் 


அதுபோற் என்னை 

முழுதும் ரசித்தவர் 

என்று எவருமில்லை 


ஏனெனில் 

ஏதோவொரு இடத்தில்

எங்கோவொரு மூலையில் 

நீ ரசிப்பதற்கென்றே


பார்வைகளையே 

கண்டிராத பகுதிகள் 

ஏராளமென்னில் 

 

இப்படிக்கு 

'இயற்கை' - யான

நான் 

செவ்வாய், 20 டிசம்பர், 2022

மாய மல்லி


 

கூந்தல் மல்லி 

குறுக்குவழி போக 


குறு குறு 

பார்வை பின் 

தொடர்ந்து செல்ல 


திரும்பி சிரித்த 

மல்லியால் 

சற்றே மயங்கிய 

பார்வை 


பின் தூரத்தை 

துளைத்தது


வாடை மட்டும் 

வீசும் மல்லி 

வந்த வழியில் 

காணாததையெண்ணி 


ஆந்தையாய் 

சுற்றிய பார்வை 

அமைதியிழந்து 

அலைய அந்நேரம் 


கரவொலி கேட்டு 

காடே அதிர 

பதறிய பார்வை 

பாதையை தேட 


பகலின் எதிரி 

பாம்பாய் 

காட்டை சூழ 

பாதையெல்லாம் 

நெளிந்தது 


மங்கிய பார்வை 

மரவோரம் 

பயந்து சரிய 


பார்வைக்கு 

நேராய் 

தொங்கியது 

கூந்தலும் 

மல்லியும்..


திங்கள், 19 டிசம்பர், 2022

தனிமையின் இடைவேளை



தயங்கித் தயங்கி

வாசலில் நின்று 

கொண்டிருந்தது 

அது 


கிடைத்த குறுகிய 

இடைவேளையில் 

ஒரு பெரிய அறையின் 

சிறிய மூலையில் 

நாற்காலியின் தலையின் 

மேலிருந்த தொலைபேசியின் 

வாயிலாக 


அவன் 

அழைத்த பல்வேறு 

அழைப்புகளுக்கும் 

ஒரே பதிவின் 

பல்வேறு முடிச்சுகளாய் 

அவிழ்ந்து அவ்வறையின் 

கடிகாரத்தின் 

ஓசையையும் விழுங்கியது 


சுருட்டுப் புகையை 

சிறை பிடித்தவாரே

வாசலறுகை நின்றிருந்த 

அதனை அவன் 

ஆழ்ந்து பார்த்ததில்

தானே வந்து 

தாழிட்டுக்கொண்டது 

அந்த 

'தனிமை'

 


ஞாயிறு, 18 டிசம்பர், 2022

எண்ணத்தின் முரண்


 

விரிசல் விட்ட 

கண்ணாடி குடுவையில் 

எந்த ஒரு 

துண்டை எடுத்தால் 

உடைந்து விடுமோ 

அதே துண்டு தான் 

அதனை 

உடையாமலும் 

காக்கிறது 


அதுபோல் 

எந்தவொரு யெண்ணத்தை 

வெளியே உரைத்தால் 

விரிசல் விட்ட 

வாழ்க்கை 

உடைந்து விடுமோ 

அதே எண்ணந்தான் 

அவ்வாழ்க்கையை 

அரண் போல் 

காக்கிறது !