திங்கள், 8 செப்டம்பர், 2025

சந்தோச மார்வாடிகள்

 உன் 

கவலைகளை 

எல்லாம் 

அடகு வைத்து 


சந்தோசத்தை 

வட்டிக்கு 

விடும் 


மார்வாடி 

மாந்தர்களை 

மறவாது 


எப்படியேனும்

உறவில் 

ஒன்றிருப்பது 


மறைவுக்கான 

மாலைகளை 

தள்ளிப்போடும் 

தாற்பரியம்

விதைத்து யாரோ

 உழவு செய்த பின் 

நல்ல மழை பெய்து 

விதைக்க காத்திருக்கும் 

நன்னிலம் போலிருந்த 

மனது


தூங்கி விழிக்கையில் 

விஸ்தாரமான மரமொன்று 

வளர்ந்துவிட   


அதன் கிளைகளை 

அனுமானிக்கிறேன் 


பாலை 

சுவைக்கிறேன் 


இலையை 

முகர்கிறேன் 


விழுதுகளை 

வியக்கிறேன் 


பழங்களை 

பறிக்கிறேன் 


வீசும் காற்றில் 

அசையும் மரத்தில் 

லயிக்கிறேன்


இம்மரம் 

பிடித்திருக்கிறதோவென 

எண்ணுகையில் 


எவர் விதைத்த 

வித்து 

இது 

எமக்கு தேவையா 

இது 


என்னும் கேள்வி 

மேலெழும்ப 


கிளைகளை 

வெட்டி வீசுகிறேன் 

வளர்கிறது விநாடியில்  


வேறு இலைகளை 

இணைக்க

கிழித்து வளர்கிறது


அடியோடு

இடமாற்ற  முயற்சிக்க  

இயைந்து கொடுக்கவில்லை 

 

வேரோடு பிடுங்க 

பிரயத்தப்பட்டு 

பயனில்லை 


கவளீகரிக்க 

முயன்று 

களைத்தப் போக 


காரணம் 

யவராயிருக்கும் 

என 

யூகித்து 


விதைத்தவனை 

எதிர்த்து 

வளர மறுக்கும் 

வழிவகை 


கூறி முடித்து 

களைந்த பின் 


இருந்தாலும் 

வளர்த்திருக்கலாம் 

என்று சொல்லி

சென்றான் 


திரும்பி நின்று 

புண் முறுவலோடு 

செல்லுகையில் 


வேறொரு 

சிவப்பு ஆலமரம் 

வியாபிக்கிறது 


சனி, 6 செப்டம்பர், 2025

திருமணத்திற்கு பின் சந்தோசத்திற்கான வழி

 பெற்றோரோடு பழைய கதையும் 

மனைவியோடு நிகழ் கதையும் 

குழந்தையோடு வருங் கதையும் 

பேசி வந்து 

அந்நேரத்திற்கு  நிகரான 

செல்வமும் 

அமையப் பெற்றால் 

இப்பிறவியிலே 

இன்பமதை

சிறிதேனும்  

நுகரலாம் 


குழந்தை கடல்

ஒவ்வொரு 

நடைக்கும் 

மண் 

அள்ளித் 

தின்னும் 

இந்த பெரிய 

குழந்தையை 

திட்டி 

அதட்டத்தான் 

யாருமில்லை 


கடல் 

கடல் ரோசம்

 சிறு காற்றுக்கும் 

சீறிக் கொண்டே

இருக்கிறது 


உப்பு 

நிறைய 

சாப்பிடும் 


பெரும் 

ரோசக்காரிதான்

போலும் 


இந்தக் கடல்

 

நொடி - மாற்றம் - நொடி

உப்பு நிறைந்த நீர் 

ஆவியாகி மேகம் சேர்ந்து 

காற்றடித்து கனிந்த போது 

உதிர்த்ததும் 

இனித்தது 

எப்பொழுது 


கவலைகள் நிறைந்த நான் 

கண் பார்த்து 

மனம் பேசி

கை கோர்த்துப்  பழகி 

உன்னுடன் சேர்ந்த போது 

இன்பங்களை 

பகிர்ந்தது 

எப்பொழுது 


நடந்தது 

நொடியில் மாற்றமா ?

மாற்றத்தின் நொடியா ?

 

தார் தகனம்

 வாகனங்களுக்கு வளைந்து 

கொடுக்கும் சாலையில் 


வரவேற்க வழியெங்கும் 

மரமில்லையென்று 

மனமுடைந்த 

பறவையொன்று 


மின்கம்பி மோதி 

தார் சாலையில் 

விழுந்தது 


உச்சுக் கொட்டி 

கடந்தாரே தவிர 

வரவில்லை ஒருவரும் 


வியர்க்காமல் விளையாடிக்கொண்டிருந்த 

சிறுவன் 

சென்று 

அழைத்து வந்தான் 

அப்பனை 


ஓரந் தள்ளி 

மண் அள்ளி 

போட வழியின்றி 


தார் ஊத்தி 

தகனம் செய்யப்பட்ட 

பறவை 


சாமிகிட்ட 

போகுமானு 

கேட்ட பையனுக்கு 

பதில் சொல்ல 

வார்தை இன்றி 


வந்த வழி 

திரும்புகையில் 

தார் நெடி 

வீசியது 

தெருவெங்கும் 


கடவுள் காண்


 கடவுளையும் காற்றையும் 

கண்டதில்லை  யவரும் 


சொன்னவர் யாரோ 

அறியதா நானோ

சொல்கிறேன்  


பொருள் அசைவினில் 

காற்றும் 

நற் செயலிலும் 

கடவுளும் 


காணலாம் 

எப்பொழுதும்