சனி, 23 ஜூலை, 2022

உண்மை = உவமை

 


'அழகை இருக்கிறாய்'

என்ற உண்மையை 

அகம் நிறைய 

உரைத்த பின் 


அவளோ 

உன் வார்த்தைகள் 

யாவும் 

உரித்த கோழி 

போல ஒன்றும் 

இல்லாமல் 

இருக்கிறது என்றாள் 


பின் சற்றே

யோசித்து 

இவ்வாறாக 

கூறினேன் 


'தேன் எடுக்க வந்த நான் வண்டு 

திகைத்து நின்றேன் உன்னைக் கண்டு 

சீ! என்று உன் கால்கொம்பால் தீண்டு 

சிறப்பான மோட்சம் எமக்கு உண்டு'


இருக்கின்ற உண்மையை 

கூட 

இல்லாத உவமைக் 

கொண்டு கூறினாலே 

கேட்க எவருக்கும் 

விருப்பம் 


- இயற்கை 

தந்தை ஈன்ற தாய்

 


நீண்ட இரவின் 

நடு சாமத்தில் 

வந்தாலும் 

காலடி சத்தங்கேட்டு 

கண் விழிப்பாள் 


வேலையிலிருந்து 

சோர்ந்து வருகையில் 

வேடிக்கை பல 

காட்டி 

சிரிக்க வைப்பாள் 


எப்போது 

சாப்பிட்டாலும் 

எனக்குமொறு  

உருண்டை

ஊட்டி விடுவாள் 


சேர்ந்து படுக்கையில் 

சோர்ந்து போய் 

சீக்கிரம் தூங்கிடுவாள் 

எனக்கு முன் 


இடையிடையே எழுந்து 

என் இருப்பை 

உறுதிப்படுத்திக் 

கொண்டு மீண்டும் 

உறங்கிடுவாள் 

 

இப்படியாக 

பெண் பிள்ளைகள் 

வளரும் போதே 

தாயாகாவே

வளருகின்றன 

அப்பாக்களுக்கு!!


- இயற்கை 

வெள்ளி, 15 ஜூலை, 2022

பெண் பார்க்கும் படலம் - 1

 



பெண்கள் கொஞ்சுவதினாலே 

நாய்கள் குட்டிகளாகவே

இருக்கின்றன போலும் 

ஆனால் 

ஆண் வாசமடித்தால் 

மட்டும் அதிரக் 

குரைக்கும் என்றெண்ணி 

வாசல் வந்ததும் 


நேற்றிரவு வைத்த 

மருதாணிச் சாயம் 

பரந்த ஒருகையும் 

இந்த பகல் 

முழங்கை வரை சிதறிய 

கடலை மாவாகிய 

மறுகையும் ஒருசேர 

"உள்ள வாங்க"

என்று சொல்லி 

நாயை  மட்டும் 

விரட்டினார் அந்தம்மா 


"உட்காருங்க" யென்று 

சொல்லிவிட்டு சிரித்துக்கொண்டே  

ஓரறைக்குள் சென்று 

துல்லியமாய் கேட்கா 

தொலைதூரம் மொலிக்கும்

பாடல் போல 

ஏதோ கத்திவிட்டு 

மறுபடி 

சிரித்துக் கொண்டே 

அடுக்களைக்குள் 

சென்று விட்டார் 


கரை வேட்டி 

கலைந்த மடிப்பை 

நேர்படுத்திக் கொண்டே

நிர்மலா பெரியசாமியின்

நெருங்கிய உறவினர் போல் 

கணத்தக் குரலில் 

வணக்கஞ் சொல்லி 

வரவேற்றார் அவர் 


எவ்வளவு செலவானாலும் 

பரவாயில்லை டாக்டர் 

என்பதுபோல் 

கல்யாணத்திற்குப் பிறகு 

எல்லாமே எம்பொண்ணுக்கு 

தான் என்றுரைத்து 

அவள் பேருரைத்தார் 


அண்ணன் அக்காள் 

தம்பி தங்கையற்ற 

தனி மலர் போலும் 

வீடெங்கும்

அவள் முகம்  

புகைப்படங்களாய் 

பூத்திருந்தத்து 


பெண்பார்க்க என்னோடு 

சேர்த்து பதினேழு பேர் 

அங்கு அவளையுஞ்

சேர்த்தே ஐந்துபேர் தான் 

இருப்பினும் 

பெண்ணுடன் பேச 

வேண்டுமென்று பெற்றோரைப் 

பார்க்க பெருமிதத்தோடு 

தலையாட்டினர் 


காமஞ் சொட்ட 

ஒரு குறள் 

காதல் கொட்ட 

பாரதி பாடல் 

எதை முதலில் 

சொல்லவென உள்ளிருப்பு 

போராட்டத்தில் 

கேள்விக்கணைகளை 

பெண்ணே தொடுத்தால் 

இப்படியாக 


தனிக்குடும்பம் 

எப்போ போவோம் ?


சனி, 9 ஜூலை, 2022

தந்தையின் தவிப்பு



கடைசி முத்தம் 

கணவனின் கண் 

அனுமதி கொண்டு 

பெறுவதில் இடம் 

பெயர்கிறதவள் வாழ்க்கை 


கேட்டதும் கொடுத்ததும் 

மனகனந்தாங்காது

நினைவு தப்பி 

நிற்கையில் கடந்து 

போய்க்கொண்டிருந்தவளின் 

பிம்பம் தேய்கையில் 

தேங்கி நின்றதென் வாழ்க்கை 


என் பிள்ளை 

என்றடையாளம் துறந்து

அவர் மனைவி 

என்றாகி போகையில் 

புலனது ஏதோ 

இழந்த உணர்வு 


அவள் பெயர்

நீக்க மனமன்றி 

புதுப்பிக்காமல் 

பழைய குடும்பமாக

என் பிள்ளையென்றே

இருக்கிறது  

குடும்ப அட்டை


எம்பெயரின் முதலெழுத்து 

அவள் பெயரின் முதலானதன் 

இருபத்தேழு வருட 

கர்வம் இன்றோடு 

ஒழிந்தது 


கல கலவென 

சிரிப்பால் நிறைந்த 

இவ்வீடு 

அவலகன்றதும் 

ராணியற்ற ராஜ்ஜியமாய்

கலையிழந்து 

வெறுங்கல் 

வீடாகியது 


கட்டளையிட ஆளற்ற 

சேவகனாய் 

தன்னிச்சையாய் செயல்பட 

முடியாது  தடுமாறி 

நிற்கின்றேன் 

நான் 


எப்போது 

வெளிச்சென்றாலும் 

எனக்கு போன் செய்துவிட்டு 

அம்மா எங்கே 

என்று கேட்பவள் 

இப்பொழுதெல்லாம் அவளுக்கு 

போன் செய்துவிட்டு 

அப்பா இல்லையா ?

என்பதன் எதார்த்தம் 

என்னால் ஏனோ 

ஏற்கமுடியவில்லை 


எது எங்கென்றறியா 

அவர் வீடு 

அவளதாகிய பின் 

அவளாசைப் படி 

அமையப்பெற்ற  

இவ்வீடு 

மறுவீடாகையில் 

சற்றே மருகுது 

நெஞ்சம்


விசேஷத்துக்கு மட்டும் 

வீடுவரும் சொந்தக்காரி 

போலான சொந்த 

மகளையெண்ணி 

அவளுக்கு பிடிக்குமென்று 

ஆட்டுக்கறி குழம்பு 

அம்மியில் அரைத்த 

மசாலா சேர்த்து 

செய்ததை அவளுக்கு 

பரிமாற வந்தால் 

'அவருக்கு முதல 

வைங்கப்பா' என்று 

சொல்வதவள் தவறில்லை 

அதை ஏற்கும் 

பக்குவம் தான் 

எனக்கு இன்னும் வரவில்லை


குழம்பு பட்டுவிட்டதென 

கண்ணாடி போட்ட 

கண்ணை தேய்த்துக் 

கொண்டே கண்ணீரோடு

அவள் காணும்முன்  

வெளிச்செல்கிறேன் 


எமக்கு பிறந்த 

எம்பிள்ளையாயினும் 

திருமணத்திற்கு பின் 

தத்துக் கொடுத்த 

தந்தை போல் 

உரிமையற்று ஓரமாய் 

நின்று வேடிக்கை 

மட்டுமே பார்க்கிறேன் 


அவன் நல்லவனாயிராவிட்டாலும் 

கெட்டவனாய் இருந்திரக்கூடா 

தென்பதே என் இறுதிநாள் 

வரையிறுக்கும் ஒரே

வேண்டுதல்


பிரிவென்பதோர் நாள் வரும் 

என்றுணர்ந்தே பிரியமும் 

பாசமும் வைக்கும் இத் 

தந்தையின் நிலை 

இப்பொழுது 

தற்கொலைக்கு நிகராகவல்லவா 

நிற்கிறது