சனி, 30 செப்டம்பர், 2023

மர வீடு

 நூறாண்டுக்கும் பழமையான 

மரங்களை 

உயிரோடு அறுத்தெறிந்து 

சாலை விரிவாக்கம் 

என்னும் பெயரில் 

சாவை நமக்கு 

நாமே 

வரவழைத்துக் கொண்டிருக்கிறோம் 


பல நாளாய் 

வீடென கருதி 

சென்று வரும்

பெயர் தெரியா பறவைக்கு 

இன்று யார் சொல்வது 

வீடு வெட்டி எறியபட்டதென்று 


செல்ல இடமறியாது

சூடு தாளாமல் 

பித்தம் கலங்கி 

கானல் நீரை 

கொத்தி குடித்து

இறக்கிறது 


அதுபோற் 

நிழலுக்கு இடமின்றி 

நா  வறண்டு

நடை தளர்ந்து

மூச்சு விட முடியாமல் 

முயங்கி மறைவோம் 


இயற்கை என்பது 

இயல்பாகவே நமக்கு 

கை கொடுக்கிறது 

எல்லா வகையிலும் 

நாம்தான் 

அதனை ஒவ்வொருமுறையும் 

வெட்டிக் கொண்டே யிருக்கிறோம்


மரமும் அதன் 

பிள்ளைகளான  பறவைகளின் 

சாபமும் 

கட்டாயம் 

மனிதரை கொல்லும்

நவீன கோவில்கள்

 இப்பொழுதெல்லாம் கோயிலுக்கு செல்ல பெரும்பாலும் யோசிப்பதேயில்லை.

யாரேனும் கட்டாயத்தின் பேரில் அழைத்தால் அவர்களோடு செல்வதுண்டு, மற்றபடி சுயமாக கோயிலுக்கு செல்ல வேண்டும் என்ற எண்ணம் சில வருடங்களாக தோன்றுவதேயில்லை. ஏனெனில் கோயில்கள் இப்பொழுதெல்லாம் நன்றாக பெயிண்ட் அடிக்கப்பட்டு தரை முழுவதும் டைல்ஸ் கல்லோ அல்லது வேறு ஏதேனும் பள பளக்கும் கல்லையோ  போட்டு நிரப்பி விடுகின்றனர். அவை எனக்கு கோயிலுக்கு சென்ற நினைப்பாய் தோன்றுவதில்லை எதோ திருமண அல்லது பிறந்தநாள் கொண்டாடப்படும் மாலுக்கு செல்லுவதை போலுள்ளது.


முன்பெல்லாம் அங்கு செல்லும்போது தரைகள் கருங்கற்களால் நிரப்பட்டிருக்கும். அவை சோர்ந்து போய் அமரும் எனக்கு மூல ஸ்தானத்தை சுற்றி வரும் போது காலுக்கு பிடிமானமாகவும் சுற்றி அமர்ந்து பின்பு மனதிற்கு ஒரு பிடிமானமும் வரும், இப்பொழுதெல்லாம் எங்கு தவறி வழுக்கி வீழ்ந்து விடுவோமா என்ற பயந்தான் மேலோங்கி நிற்கிறது கவனமெல்லாம் கூர்ந்து கவனித்து நடப்பதிலே இருக்கிறது.


சில சமயம் தலைவலியோடு போனால் கூட அமைதியான சூழல், காதோரம் மெதுவாய்பாடும் MSV, தீப ஒளியில் தெய்வம் என்னும் நிறைவோடு, வலி அதனை மறந்து வந்தநாட்கள் கூட உண்டு. 


கோயில்களில் நண்பர்களை பிடித்த கதையெல்லாம் கூட கேட்டிருக்கிறேன். பெரிய ஆலமரம் கோவிலின் வளாகத்தில் இருக்க, அதனை சுற்றி யாவரும் அமர ஏதுவாய் கருங்கல் அமைக்கப்பட்டிருக்கும். மெல்லிய காற்று, கிளையொடு இசைந்தாடும் இலைகள், பெயர் தெரியா பறவைகளின் எச்சம் பல வீழ்ந்து கருங்கல் வெள்ளையாகிருக்கும் இடத்தில்  இலைகளை கைகளால் நீக்கி புறந்தள்ளிவிட்டு, அமர்ந்து பல யோசனைகளுக்கு அப்பால் கண்களை மூடி, மணியோசை கேட்டு விழிக்கையில் பாரம் பாதியாக குறைந்ததை எண்ணி எட்டு வைத்து நடந்தவர்கள் பலர்.


அதனை சுற்றி இரும்பு கம்பிகள் கொண்டு வேலியமைத்து ஆலமரத்தினடியில் மீண்டும் பிள்ளையாரை வைத்து இன்னுமொரு உண்டியல் வைத்து நிரப்பட்ட பின்னர் எங்கு அமருவது? எதோ உணவகத்துக்கு சென்றது போல்  சாப்பிட்டோமா, காசு குடுத்தோமா, வந்தோமா என்பது போலுள்ளது.


கண்ணை பறிக்கும் அலங்கார விளக்குகள், காதை கிழிக்கும் இசை, கூட்ட நெரிசலிலும் குலுங்காமல் youtube-க்கு நேரலை அனுப்பும் தம்பி, கயிறு விற்க, ஜோசியம் பார்க்க, சீட்டு குலுக்கி போட்டு சிவப்பு சிலிர்க்கும் வெள்ளை வெளுக்கும் என்று அதற்கேற்றாற்போல் கதை சொல்ல இன்னும் ஏரளமாம் ஏராளம், இதிலெங்கு அமைதியை தேடுவது. அனேகமாக அதுவே எங்கோ கூட்ட நெரிசலில் விழி பிதுங்கி கிடக்கும் என்று தான் நினைக்கிறேன்.


கோயில்கள் மன நிறைவை கொடுத்தது போதுமென்றெண்ணி பண வரவை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது போலும்.


கோவிலுக்கு சென்று வந்த நினைவு அக்கோயிலுடன் உண்டான பிணைப்பு எல்லாம் நீர்த்து போவது போலுள்ளது, மனதில் பெரும்பாலும் அது சார்ந்த எதுவும் படியாமலே கரைந்து போகின்றது. கோவிலுக்கு சென்று வந்தோம் என்ற மன நிறைவே கூட பாதியாகிவிட்டது.


எல்லா கோயில்களும் அப்படி இல்லை, ஆனால் இப்படியும் கோயில்கள் இருக்கத்தான் செய்கின்றது.